1947-ஆம் ஆண்டு 11-ஆம் நாள் அழகப்பா கல்லூரி காரைக்குடி மக்கள் கல்வி பெறுவதற்காக வள்ளல் அழகப்பர் அவர்களால் தொடங்கப் பெற்றது. அந்நாளைய கல்வி அமைச்சர் திரு.டி.எல்.அவினாசிலிங்கம் செட்டியார் காந்தி மாளிகையில் கல்லூரியைத் தொடங்கி வைத்தார். அவ்வருடம் நவம்பர் மாதம் 26ஆம் நாள் மாநில அரசு 664 ஏக்கர் தரிசு நிலத்தை கல்லூரிக்கு வழங்கியது. கலைப்பாடங்களோடு தொடங்கப்பட்ட கல்லூரிக்கு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் ஆகிய இளநிலை அறிவியல் பாட வகுப்புகளுக்கான பல்கலைக்கழக இணைப்பு அறிவியல் பாட வகுப்புகளுக்கான பல்கலைக்கழக இணைப்பு 1948-ஆம் ஆண்டு சூன் மாதம் கிடைக்கப்பெற்றது. அவ்வருடமே சூலை 4-ஆம் நாள் அந்நாளைய முதலமைச்சர் திரு.ஒ.பி.ராமசாமி ரெட்டியார் கல்லூரியின் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார். 1949-ஆம் ஆண்டு மே 20-ஆம் நாள் புவியமைப்பியல் பாடவகுப்பு தொடங்கப்பட்டது. இளங்கலைப் பிரிவில் தமிழ் 1954 - ஆம் ஆண்டும், அரசியல், ஆங்கிலம் ஆகியவை 1957-ஆம் ஆண்டும் தொடங்கப்பெற்றன. 1958-ஆம் ஆண்டு தமிழ் முதுநிலைப் பாடவகுப்பு தொடங்கப்பட்டு. கல்லூரி ஒரு முதுநிலைக் கல்லூரியாக உயர்வு பெற்றது. டாக்டர்.ஏ.எல்.முதலியார் 1954-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் நாள் கல்லூரி நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். டாக்டர் மு.வ.தமிழ் முதுநிலைப்பாடக் கட்டிடத்தை 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் நாள் தொடங்கி வைத்தார். 1970-71 ஆம் கல்வியாண்டில் எம்.காம் வகுப்பு தொடங்கப்பெற்றது.